நல்லதொரு ஆரம்பம்!

நல்லதொரு ஆரம்பம்!

சென்னை அயப்பாக்கத்தில் இருந்து தி.நகரில் தான் சுகாதாரப் பணியாளராக வேலை பார்க்கும் நிறுவனத் துக்குச் செல்ல பேருந்தில் ஏறுகிறார் ராணி.

வழக்கம் போல் டிக்கெட் எடுப்பதற்குப் பணம் கொடுக்கிறார். அப்போது கண்டக்டர் பணம் வாங்காமல், இனி பேருந்தில் நீங்கள் இலவசமாக போலாம், வரலாம் என்கிறார். ராணிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.  ‘எனக்கு மாதம் எட்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் சம்பளம். அதில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் டிக்கெட்டுக்கென்று தனியாக எடுத்து வைக்க வேண்டும். வேலை நேரத்தில் பசித்தால் டீ, வடை கூடவாங்கி சாப்பிட முடியாது. கையில் இருக்கும் பணத்தை இப்படிச் செலவு பண்ணிட்டா டிக்கெட் எடுக்க என்ன செய்வது என்று தான் யோசிப்பேன்.என்னைப் போன்ற பெண்களுக்கு இந்த திட்டம் மிகவும் நன்மை தரக்கூடியது,‘ என்கிறார் அந்திமழையிடம் நெகிழ்ச்சியாக.

தன் அறுபத்தியெட்டாம் வயதில் தமிழக முதலமைச்சர் ‘பதவிக்கு'.. இல்லை... கலைஞர் சொன்னபடி

‘பொறுப்புக்கு' வந்திருக்கிறார், மு.க.ஸ்டாலின். அவரது ஆரம்பகால அறிவிப்புகளில் ஒன்றுதான் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப்பயணம். இதில் திருநங்கையரையும் சேர்த்துக்கொள்ளலாமே என ட்விட்டரில் கோரிக்கை வர அதையும் நிறைவேற்றி இருக்கிறார் முதல்வர்.

தலைமைச்செயலாளராக இறையன்பு, முதல்வரின் தனிச் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய திறமைவாய்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவை  ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் வேலையாக அறிவித்ததில் இருந்தே தன் நோக்கத்தை தெளிவாக உணர்த்தி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். சிறந்த ஆளுமைத் திறன்களுக்காக அறியப்பட்ட, அவற்றை நிரூபித்த அதிகாரிகளைப் பொறுக்கி எடுத்துள்ளார் ஸ்டாலின்.

காவல்துறை தலைவராக சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப்சிங் பேடி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட அதிகாரியாக ஷில்பா சதீஷ் பிரபாகர் என இந்த சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் பட்டியல் நீளமானது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனை கூறும் குழுவில் அனைத்து தரப்பினரும் இடம் பெற்றிருப்பதும் குறிப்பாக சென்ற  அரசின்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம்பெற்றது ஆச்சர்யத்தை உருவாக்கியது. தமிழ்நாடு வளர்ச்சிக்கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் இடம்பெற்றதுடன் அதில் ஓர் உறுப்பினராக நடனக்கலைஞரான நர்த்தகி நடராஜ் இடம்பெற்றிருப்பது பாலினப் புதுமை

யோரையும் அங்கீகரிக்கும் முயற்சியாகப் பார்க்கப்பட்டது.

காவேரிக்கு குறுக்காக மேகதாட்டு அணை கட்டும் பிரச்னையில் சமீபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம், பிரதமரை சந்திக்க அனைத்துக் கட்சிக் குழு என மாநிலப் பிரச்னைகளில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் தொய்வு இல்லை.

கொரோனா இரண்டாவது அலையின் உக்கிரத்தாக்கம் தேர்தல் பிரசாரங்கள், கோவில் திருவிழாக்களால் கிராமப்புறங்களையும் விடாது தாக்கிய நேரத்தில்தான் அரசு பதவி ஏற்க வேண்டி வந்தது. மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறவர் எனப் பெயர் பெற்ற மா.சுப்ரமணியன் சுகாதாரத்துறை

அமைச்சராக நியமிக்கப்பட்டார். அத்துடன் ஏற்கெனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் இத்துறை செயலாளாக இருந்த ஜே.ராதாகிருஷ்ணனே தொடர்வது ஆச்சர்யம் அளிக்கிறது. பொதுவாக பழைய  ஆட்சிக் காலத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் முழுமையாக மாற்றப்படுவது வழக்கம். ஆனால் விதிவிலக்காக ராதாகிருஷ்ணனே தொடர்வது  ஒரு பொறுப்புள்ள அணுகுமுறையே.

தேர்தல் சமயத்தில் கொடுக்கப்பட்ட பல வாக்குறுதிகளில் ஒன்றான அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் 4000 ரூபாய் இரு தவணையாக வழங்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

ஐந்து லட்சம் கோடி அளவுக்கு கடன் வைத்திருக்கும் தமிழ்நாடு மாநிலம் பொதுவாகவே நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 40000 கோடி வட்டி கட்டவேண்டிய நிலையில் இருக்கிறது. இதை மீட்பதற்கான சரியான ஆலோசனைகள் தேவை. இதற்காக எஸ்தர் டெஃப்லோ, ரகுராம்ராஜன், அரவிந்த் சுப்ரமண்யன், ஷான் த்ரே, எஸ்.நாராயண் போன்ற பொருளாதார அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்கள் எல்லாம் தமிழ்நாட்டு சூழலோடு ஒரு விதத்தில் தொடர்புடையவை. நோபல் பரிசுபெற்ற டெப்லோவும், பொருளாதார அறிஞர் ஷான் த்ரேவும் தமிழ்நாட்டு வேர்களுடன் தொடர்பு அற்றவர்கள் என்றாலும் நம் மாநிலத்தில் ஆய்வுகள் செய்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற விருதுகளைப் பெறும் எழுத்தாளர்களுக்கு அரசு வீடு வழங்கப்படும்; இலக்கிய மாமணி விருதுகள் உருவாக்கப்படும் ஆகிய அறிவிப்புகளும் இலக்கிய அமைப்புகளின் வரவேற்பைப் பெற்றுள்ளன. பத்திரிகையாளர் மாலன் கொரோனாவால் உயிரிழந்த அரசு அலுவலர்களின்  நினைவாக பூங்கா அமைக்கலாமே என எழுத, சென்னை மாநகராட்சியில் அது செயலாக்கம் பெறுகிறது.

சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்களின் முதல்முகவரி& தமிழ்நாடு என்ற விழாவில் 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகிட வகை செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்தது. தொழில் வளர்ச்சி தொடர்பாக  அரசின் அணுகுமுறைகள் தீவிரமாகவே உள்ளன.

‘இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் செயல்பாடுகள் வியப்பாக இருக்கிறது. அன்றாடம் ஒவ்வொரு ஆலயத்துக்கு போகிறார், ஆய்வு செய்கிறார். பலகோடி ரூபாய் நிலங்களை மீட்டுள்ளார் என செய்தி வருகிறது'என்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளதையும் குறிப்பிடலாம்.

புதிய அரசு எடுத்து வைத்திருக்கும் ஆரம்ப அடிகள் பாராட்டத்தக்கன. ஆனால் விலை வாசியைக் கட்டுப்படுத்துதல், நீட் தேர்வு குறித்தான நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டிருக்கும் கல்விச் செயல்பாடுகளை மீட்டெடுத்தல் போன்றவற்றிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழகம் எதிர்பார்க்கிறது. கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சமும் இருண்டமேகமாய்த் தெரிவதுதான் இந்த அரசுக்கு அடுத்த அக்னிப்பரீட்சையாகக் காத்திருக்கிறது!

ஆகஸ்ட், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com